Tamilசெய்திகள்

தேமுதிக யாருடன் கூட்டணி? – நாளை தெரிந்துவிடும்

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இரு அணிகள் மோத உள்ளன.

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகியவை இடம் பெற்றுள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், டி.டி. வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் யார் கூட்டணிக்கு வந்தாலும், வராவிட்டாலும் அனைத்து தொகுதிகளிலும் களம் இறங்குவது என்ற முடிவுடன் உள்ளனர். இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளது. தே.மு.தி.க. முதலில் டெல்லி சென்று பா.ஜனதாவுடன் பேச்சு நடத்தியது. எனவே அந்த கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தே.மு.தி.க.வுக்கு முன்னதாக பா.ம.க.வுக்கு 7 இடங்களை அ.தி.மு.க. விட்டுக் கொடுத்ததால் அதே போன்று 7 இடங்கள் தங்களுக்கும் வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் கூறப்பட்டதால் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை விழுந்தது.

இதற்கிடையே விஜயகாந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள். இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்று கருதப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியிலும் தே.மு.தி.க.வுக்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை. அதிக பட்சமாக 5 தொகுதிகள் தான் தருவோம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க. அணியில் இடம் பெறுவதை தே.மு.தி.க. தவிர்த்தது.

தே.மு.தி.க.வுக்காக இனி காத்திருக்க இயலாது என்ற முடிவுக்கு வந்த தி.மு.க. தன் தோழமைக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இன்று அல்லது நாளைக்குள் தி.மு.க.வில் அனைத்து தொகுதிகளுக்கும் உடன்பாடு எட்டப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் மீண்டும் தே.மு.தி.க.வுடன் பேச்சு நடத்தினார்கள். கடந்த வார இறுதியில் அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த பேச்சுவார்த்தையில் திடீர் சிக்கல் தோன்றியது.

இதற்கு தே.மு.தி.க. தரப்பில் வைக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க.விடம் 7 தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதமாக பேசி வந்த தே.மு.தி.க. பிறகு சற்று இறங்கி வந்தது.

5 தொகுதிகள் கொடுத்தால் போதும் என்று கூறிய தே.மு.தி.க. தலைவர்கள் மேல்-சபையில் ஒரு இடம் வேண்டும் மேலும் 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிபந்தனையால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. பேச்சு வார்த்தையில் குழப்பம் நீடிக்கிறது.

இந்த குழப்பத்துக்கு இடையே நேற்று விஜயகாந்தை ச.ம.க. தலைவர் சரத்குமார் திடீரென்று சந்தித்து பேசினார். இதனால் தே.மு.தி.க.வின் முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.

தே.மு.தி.க. தலைவர்களில் சிலர் டி.டி.வி.தினகரனுடன் பேசி வருவதாக உறுதி செய்யப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தே.மு.தி.க.வை தங்கள் அணியில் இருந்து விட்டுவிடக்கூடாது என்று பா.ஜனதா மூத்த தலைவர்கள் உஷாராகி இருக்கிறார்கள்.

அவர்கள் தே.மு.தி.க. தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். கொஞ்சம் விட்டு கொடுத்து அ.தி.மு.க. அணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதை விஜயகாந்த் ஏற்பாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

இந்த நிலையில் தே.மு.தி.க.வின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு பற்றி இறுதி முடிவுகள் எடுக்கப்படுகிறது.

எனவே தே.மு.தி.க.வின் முடிவு என்ன என்பது நாளை தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6-ந்தேதி மோடி சென்னைக்கு வருவதால் தே.மு.தி.க.வுடனான பேச்சு வார்த்தையை நாளைக்குள் முடித்து விட வேண்டும் என்று அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்களும் ஆவலுடன் உள்ளனர். எனவே நாளை இதில் ஒரு தெளிவான நிலை தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. -தே.மு.தி.க. இடையே இன்று (திங்கட்கிழமை) தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டு விடலாம் என்று நேற்று இரவு ஒரு தரப்பில் கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை நடைபெறுவதாக இருந்த அரசு திட்ட விழாக்களை சற்று தள்ளி வைக்கவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராக இருந்தார்.

ஆனால் தே.மு.தி.க. தரப்பில் உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இன்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர்.

தே.மு.தி.க.வின் பிடிவாதத்தால் அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிருப்தி உருவாகி இருக்கிறது. இது தொடர்பாக மூத்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர் கூறியதாவது:-

தே.மு.தி.க.வுக்கு முன்பு போல வாக்குவங்கி கிடையாது. அந்த கட்சிக்கு 3 சதவீத வாக்குகளே உள்ளன. இது அனைவருக்கும் தெரியும். என்றாலும் தே.மு.தி.க. இந்த விஷயங்களில் பிடிவாதமாக இருப்பதால் ஒப்பந்தம் தள்ளி போய் உள்ளது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை தே.மு.தி.க. வந்தால் வரவேற்போம். வராவிட்டால் கவலையில்லை. பா.ஜனதா தான் தொடர்ந்து தே.மு.தி.க.வை இடம் பெற செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது. அதனால் தான் நாங்கள் தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.

தே.மு.தி.க. 7 தொகுதிகளை கேட்பதில் அர்த்தமே இல்லை. 5 தொகுதிகள்தான் கொடுக்க இயலும். அதற்கு மேல் கொடுத்தால் அ.தி.மு.க. உட்கட்சியில் பிரச்சனைகள் உருவாகி விடும். இதை தே.மு.தி.க. புரிந்துக் கொள்ள வேண்டும். தே.மு.தி.க. தலைவர்களில் சிலர் 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்ட பிறகு 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் 5 தொகுதிகளை கேட்கிறார்கள். இந்த 21 தொகுதிகளில் திருவாரூர் தவிர 20 தொகுதிகளும் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். இந்த தொகுதிகளை எப்படி மற்ற கட்சிகளுக்கு கொடுக்க முடியும்?

பா.ம.க., பா.ஜனதா, புதிய தமிழகம் கட்சிகள் இதை புரிந்து கொண்டு 21 தொகுதிகளில் அ.தி.மு.க.வை ஆதரிக்க முன் வந்துள்ளன. தே.மு.தி.க. மட்டும் இதில் பங்கு கேட்பதை எப்படி ஏற்க முடியும்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 20 சதவீத இடங்களை தே.மு.தி.க.வுக்கு விட்டு தர அ.தி.மு.க. சம்மதித்து உள்ளது. அதை ஏற்று தே.மு.தி.க. கூட்டணியில் இடம் பெற முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த மூத்த அ.தி.மு.க. தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *