Tamilசெய்திகள்

தேவையற்று திணிக்கும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை ரிஷி சுனக் தளர்த்தியுள்ளது – டொனால் டிரம்ப் பாராட்டு

உலகெங்கிலும் வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேறும் கரியமிலம் உட்பட பல நச்சு வாயுக்களினால் காற்றின் நச்சுத்தன்மை கூடி வருவதாகவும், இதனால் புவி வெப்பமடைவது அதிகரிப்பதுடன் வானிலையின் பருவகால நிகழ்வுகள் சீரற்று போவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கூறி வந்தனர்.

பல முன்னணி உலக நாடுகள் ஒன்றுபட்டு இதற்காக “நெட் ஜீரோ” எனும் திட்டத்தை உருவாக்கியது. இதன்படி நச்சு வாயுக்கள் வெளியேற்றத்தை சில வருடங்களில் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வருவதற்கு உலக நாடுகள் சம்மதித்தன. இதன்படி புவி வெப்பத்தின் அளவு 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க தற்போதைய நச்சு வெளியேற்றங்களை 2030 ஆண்டிற்குள் 45 சதவீத அளவிற்கு குறைப்பதற்கும், 2050 ஆண்டிற்குள் 0 சதவீத அளவிற்கு கொண்டு வரவும் பாரிஸ் ஒப்பந்தம் எனும் ஒரு உடன்படிக்கை சில வருடங்களுக்கு முன் கையெழுத்தானது.

2030 வருடத்திற்கு இன்னும் ஏழே ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போது பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், வீடுகள், வாகனங்கள், தொழிற்சாலை மற்றும் எரிசக்தி துறை ஆகியவற்றின் நச்சுப்புகை வெளியேற்றங்களை கட்டுபடுத்த 2030க்கான இலக்குகளை தள்ளி போட்டிருப்பதாக அறிவித்தார்.

இலக்குகளை அடைய மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என கூறிய சுனக், 2030ல் பிரிட்டன் கொண்டு வர வேண்டிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கான தடையை 2035 ஆண்டிற்கு ஒத்தி வைத்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரிஷி சுனக்கின் இந்த முடிவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதளமான “ட்ரூத் சோஷியல்” கணக்கில் பாராட்டியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

அமெரிக்கா தன் மீதும், உலக நாடுகளின் மீதும் தேவையற்று திணிக்கும் இந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை ரிஷி சுனக் தளர்த்தியுள்ளது நல்ல முடிவு. இலக்கில்லாமல் செயல்பட்டு வரும் வானிலை ஆர்வலர்களின் அறிவுறுத்தல்களை கேட்டு நாட்டை திவால் நிலைக்கு கொண்டு செல்லாமல் புத்திசாலித்தனமாக பிரிட்டனை ரிஷி காப்பாற்றியுள்ளார். ஆனால், செயல்படுத்த முடியாத விஷயங்களுக்காக, அமெரிக்கா பல லட்சம் கோடிகளை செலவிட்டு வானிலை மாற்றங்களை தடுப்பதாக கூறி விரையம் செய்து வருகிறது. இந்த புரட்டை முன்னரே அறிந்து கொண்டு தன் நாட்டை காத்த சுனக்கிற்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.