Tamilசினிமா

நடிகர் விஷாலை எச்சரித்த உயர் நீதிமன்ற நீதிபதி

மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய கடனை லைகா நிறுவனம் திருப்பிச் செலுத்தியது. இந்த தொகையை திருப்பித் தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வேறு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விஷால் சொத்துக்கணக்கு மற்றும் வங்கிக் கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இருநீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட இடைக்கால தடையும் விதித்தது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, விஷால் நேரில் ஆஜரானார். அப்போது, அவரது சொத்துக் கணக்கு, வங்கி கணக்கு விவரங்களை 19-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், கடந்த 19-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை. அவர் தரப்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, விஷாலை நேரில் ஆஜராக மீண்டும் நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் ஆஜராகினார். அவர் தரப்பில் இளம் வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ”19-ந்தேதி சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தாக்கல் செய்ய உத்தர விட்டும், தாக்கல் செய்யவில்லை. வக்கீல்களும் ஆஜராகவில்லை. இந்த ஐகோர்ட்டின் உத்தரவை விஷால் வேண்டுமென்றே அலட்சியம் செய்கிறார். இந்த ஐகோர்ட்டை பொறுத்தவரை அனைவரும் சமம் தான். பெரியவர், சின்னவர் என்ற பாகுபாடு கிடையாது. அதனால், விஷால் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பேன்” என்று எச்ரிக்கை செய்தார்.

அதற்கு வக்கீல், நேற்று அனைத்து விவரங்களும் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். உடனே நீதிபதி, அதற்கான ஆதாரம் எங்கே? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.