Tamilசெய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்-1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், இலவச சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முன்னதாக ஈரோடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளிக்கு ஏற்கனவே சைக்கிள் உதிரி பாகங்கள் வந்து இறங்கின. அங்கு சைக்கிள்களை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சைக்கிள்கள் முழுமையாக பொருத்தப்பட்டு மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இலவச சைக்கிள்களை வாங்குவதற்கும் மாணவ- மாணவிகள் ஆர்வமாக உள்ளனர்.