Tamilசெய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர் குழு இன்று ஆலோசனை

உலகளவில் மக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ், இரண்டு ஆண்டுகள் ஓடியபின்னரும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

உலகமே கொரோனா தொற்றின் முதல் அலை, இரண்டாவது அலைகளில் சிக்சி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை சந்தித்து விட்டன. தற்போது உருமாற்று வகை ஒமைக்ரான் கொரோனா தொற்றால் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.

இருப்பினும், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்தியா உள்பட உலக நாடுகள் பைசர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவிஷீல்டு, கோவேக்சின் உள்ளிட்ட 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றன.

பெரும்பாலான நாடுகள் சிறுவர்களுக்கு தடுப்பூசியும், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்த தொடங்கிவிட்டன.

ஆனால், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. சமீபத்தில் இது தொடர்பாக தொழில்நுட்பக் குழு நடத்திய ஆலோசனையில் மாறுபட்ட கருத்துகள் நிலவியதால், பூஸ்டர் தடுப்பூசி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மருத்துவக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.