Tamilவிளையாட்டு

பெங்களூர் ஐபிஎல் அணியின் புதிய கேப்டன் யார்? – எதிர்ப்பார்ப்பில் மக்கள்

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 26-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஐ.பி.எல். சீசனில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் லக்னோ அணியை கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கி உள்ளது.

அகமதாபாத் அணியை சர்வதேச பங்கு முதலீட்டு நிறுவனமான சி.வி.சி. கேப்பிட்டல் ரூ.5,600 கோடிக்கு வாங்கி உள்ளது. புதிய அணிகளுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்பதால் இந்த சீசனுக்கான போட்டி முறைகள் மாறுதல் செய்யப்பட்டு இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புனேயில் நடை பெறுகிறது.

இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ்அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை 9 அணிகளுக்கு கேப்டன் அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஒரே ஒரு அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சுக்கு மட்டும் இன்னும் கேப்டன் அறிவிக்கப்படவில்லை.

பெங்களூர் அணிக்கு கடந்த காலங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். ஐ.பி.எல். கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய அணிகளில் கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் புதிய கேப்டன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

9 அணிகளின் கேப்டன்கள் விவரம் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்- டோனி, மும்பை இந்தியன்ஸ்- ரோகித்சர்மா, டெல்லி கேப்பிட்டல்ஸ்- ரி‌ஷப்பண்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர், ராஜஸ்தான் ராயல்ஸ்-சஞ்சு சாம்சன், பஞ்சாப் கிங்ஸ்- மயங்க் அகர்வால், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- லோகேஷ் ராகுல், குஜராத் டைட்டன்ஸ்- ஹர்திக் பாண்ட்யா.