Tamilசெய்திகள்

பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு

எடப்பாடி பழனிசாமியிடம் இன்று நிருபர்கள் மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறி உள்ளோம்” என்றார்.

அ.தி.மு.க. ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறி இருந்த தகவல் வருமாறு:-

பல்வேறு மதங்களையும், வெவ்வேறான நம்பிக்கைகளையும் கொண்ட மக்களை ஒருங்கிணைக்கும் ஒரே இணைப்புச் சக்தியாக மதச்சார்பின்மை விளங்குகிறது. ஒவ்வொரு நபரும் அவரின் விருப்பத்திற்குரிய மதத்தைப் பின்பற்றுவதற்கும், மற்றும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதற்கும் உரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-ம் பிரிவுகளுக்கு அ.தி.மு.க. உரிய மதிப்பளிக்கிறது.

இந்திய நாட்டின் சிறுபான்மையினரின் மதம் மற்றும் மனித உரிமைகளை பறிக்கின்ற வகையில், ஒரே சீரான உரிமையியல் விதித் தொகுப்பிற்காக, அரசமைப்புச் சட்டத்தில் எவ்விதத் திருத்தங்களையும் கொண்டுவர வேண்டாம் என மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.