Tamilசெய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொடரும் நிர்வாகிகள் விலகல்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனும் தோல்வி அடைந்தார்.

தேர்தல் தோல்வி தொடர்பாக கடந்த வாரம் கட்சி அலுவலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விலகினார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில துணைத் தலைவரான கோவையைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் கமல்ஹாசன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளுடன் பரபரப்பான அறிக்கையும் வெளியிட்டார்.

அவரைப் போன்று மேலும் 4 மாநில செயலாளர்களும் அப்போது விலகினார்கள்.

கமல் கட்சியில் மாநில பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் நேற்று தனிப்பட்ட காரணங்களால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தனர்.

இதுபோன்று தொடர்ந்து கமல் கட்சியில் இருந்து நிர்வாகிகள் ஆளை விட்டால் போதும் என்று தெறித்து ஓடி வருகிறார்கள்.

இதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். முன்னணி நிர்வாகிகள் இதுபோன்று விலகி செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கமல் கட்சியில் உள்ள ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் யார் எங்கு சென்றாலும் நாங்கள் கமலின் பக்கம் இருப்போம் என்று அவரது ரசிகர்கள் பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பொதுவானவர்கள் பலரும் கமல் கட்சியை விமர்சித்தும், கிண்டல் செய்தும் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.