Tamilசெய்திகள்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சசிகலா ரகசியமாக சந்தித்தாரா?

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக உருவெடுத்துள்ள நிலையில் அவருக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் பெரிய அளவில் பாதிப்பையோ தாக்கத்தையோ ஏற்படுத்தாமலேயே உள்ளன. அ.தி.மு.க.வில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பன்னீர்செல்வம் தனி அணியாக அ.தி.மு.க. என்ற பெயரிலேயே இயங்கி வருகிறார். ஆனால் அவரால் பெரிய அளவில் கட்சியின் மேல் மட்ட தலைவர்களையோ நிர்வாகிகளையோ தன் பக்கம் இழுக்க முடியவில்லை. திருச்சியில் அவர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டுக்கு பிறகு மீண்டும பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க.வில் சேர்வதற்கு வாய்ப்பு இருக்குமோ என்கிற யூகங்கள் எழுந்தன.

ஆனால் அது போன்று எந்தவித நிகழ்வும் நடைபெறவில்லை. அதற்கு மாறாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனோடு இணைந்து செயல்பட போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதற்காக நேரில் சென்று அவரை சந்தித்து பேசிய ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக சசிகலாவையும் சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சசிகலா ரகசியமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க.வில் எப்படியாவது மீண்டும் ஐக்கியமாகி விட வேண்டும் என்று காயை நகர்த்தி வரும் சசிகலா தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தனது ஆதரவாளர்கள் மூலமாக அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ சசிகலா குடும்பத்தினரை மீண்டும் கட்சிக்குள் விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அ.தி.மு.க.வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் நிலைப்பாடும் அப்படியே உள்ளது.

இதனால் மத்தியில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் துணையுடன் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்துவிடலாம் என கணக்கு போட்டுள்ள சசிகலா அது தொடர்பாக திரைமறைவில் அதிரடி அரசியலில் ஈடுபட்டு காய் நகர்த்தி வருகிறார். இதற்காகவே கர்நாடகா சட்டமன்ற பிரசாரத்துக்காக வந்திருந்த அமித்ஷாவை அவர் சந்தித்து பேசி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பின்போது அமித் ஷாவிடம் சசிகலா பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

ஒன்றுபட்ட அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என்பதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இதன் முன்னோட்டமாகவே ஓ.பன்னீர்செல்வத்தை டி.டி.வி.தினகரன் போய் சந்திக்க வைப்பதற்கான பணிகள் நடைபெற்று முடிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரிந்து கிடக்கும் நீங்கள் முதலில் சேருங்கள் அதன் பிறகு உங்கள் அனைவரையும் அ.தி.மு.க.வில் சேர்ப்பது பற்றி பேசலாம் என்று டெல்லி பா.ஜ.க. சசிகலாவிடம் சில அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே பன்னீர்செல்வம் டி.டி.வி. தினகரன் சந்திப்பு நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழகத்தில் அ.தி.மு.க. விவகாரத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினர் அனைவரையும் ஒன்றிணைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்க வைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதற்கு தனி கட்சியாக செயல்பட்டு வரும் டி.டி.வி. தினகரன் எப்படி சம்மதிக்க போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தலைமை பதவி வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி தலைமையை ஏற்று செயல்படுவாரா? என்பதும் கேள்வியாக இருந்திருக்கிறது. அப்படி சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகிய மூன்று பேரையும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டால் கட்சியில் அவர்களது ரோல் என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

இது போன்ற சிக்கல்களை எல்லாம் எதிர்கொள்ள முடியாது என கருதி தான் எடப்பாடி பழனிசாமி இவர்களை எல்லாம் வேண்டாம் என்று கூறி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இதற்கு முன்னர் பல்வேறு உதாரணங்கள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் அ.தி.மு.க.வில் தற்போது பிரிந்து செயல்பட்டு வரும் தலைவர்கள் மீண்டும் இணைந்து செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதே பாரதிய ஜனதா மூத்த தலைவர் ஒருவரின் கருத்தாக உள்ளது.

இது தொடர்பாக அவர் கூறும்போது தற்போது தனியாக செயல்பட்டு வரும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி வைத்துள்ளார். பன்னீர் செல்வத்துக்கும் அதுபோன்று வாக்கு வங்கி உள்ளதா? என்பது உறுதியாக தெரியாத நிலையில் அவரும் தனது பங்குக்கு நிர்வாகிகளை நியமித்து வைத்திருக்கிறார். இவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வில் செயல்பட்டால் நிச்சயம் அது திமுக கூட்டணியை வீழ்த்த வலுவானதாக அமையும் என்பதே பாரதிய ஜனதாவின் கணக்காக உள்ளது. இதனை அ.தி.மு.க. தலைமையிடம் கூறி இருக்கிறோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்புவோம் எனவும் அவர் தெரிவித்தார்.