Tamilசெய்திகள்

மார்ச் 8 ஆம் தேதியன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார்

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் அவர், பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன முனையத்தைப் பார்வையிடுகிறார். அதன் பின்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு செல்கிறார்.

அங்கிருந்து கார் மூலம் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வருகிறார். அங்கு சென்னை-கோவை இடையே ஓட உள்ள அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ ரெயில் சேவையை அவர் தொடங்கிவைக்கிறார். அதையடுத்து அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறுகிற நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து கார் மூலம் புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அவர் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்கிறார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மறுநாள் 9-ந் தேதி காலை 7.15 மணியளவில் மைசூரில் இருந்து முதுமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகிறார். அங்கு, அவர் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆஸ்கார் விருது பெற்ற குறும்படத்தில் இடம்பெற்றுள்ள அம்முக்குட்டி என்ற பொம்மி என்னும் பெயர் கொண்ட யானையை அவர் பார்க்கிறார். அதை வளர்க்கும் தம்பதியான பொம்மன், பெள்ளியையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

மேலும், புலிகள் பராமரிப்பு தொடர்புடைய திட்டங்களையும் பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார். அன்று பிற்பகல் 12.30 மணி வரை அவர் நீலகிரி பகுதியில் இருப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி தொடர்பாக போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி வந்து செல்ல இருக்கும் இடங்களுக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்புடைய உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.