Tamilசினிமா

ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்த விவகாரம் – இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம்

சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை பதிவு செய்து வந்தனர்.

இதையடுத்து நரிக்குறவர்களை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து ரோகிணி திரையரங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தின் வாயிலாக கண்டன குரல்களை பதிவு செய்துள்ளார். அதில், நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.