Tamilசெய்திகள்

ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின் வாரியம்

வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை செயல்படுத்துமாறு ஏற்கனவே அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, வீடுகளுக்கு ‘ஸ்மார்ட்’ மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியது.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் செயல்முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் 3 தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டது.

இந்த நிலையில், ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டரை மின் வாரியம் திடீரென ரத்து செய்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்வதில் இருந்து வரும் முறைகேட்டை தடுக்கவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  ரூ.10 ஆயிரத்து 790 கோடியில் இந்த திட்டத்தை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது பரீட்சார்த்த அடிப்படையில் சென்னை தியாகராயநகர் பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது.

இதில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சரி செய்து தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் அறிவிப்பில் எதிர்காலத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.

மின்வாரியத்தின் பல நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத வகையில் இருப்பதால் டெண்டர் கோர நிறுவனங்கள் முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அழைத்து டெண்டர் கோருவதில் இருந்து வரும் சிக்கல்கள் என்னென்ன என்பதை மின்வாரியம் கேட்டறிந்தது.

அப்போது இந்த நிறுவனங்களின் தரப்பில் 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணவும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த சந்தேகங்களை சரி செய்து அவற்றில் பலவற்றை ஏற்றுக்கொள்ள மின்வாரியம் முடிவு செய்தது. இதற்காக திருத்தப்பட்ட டெண்டரை வெளியிடுவதற்கு பதிலாக அத்தனை சந்தேகங்களுக்கான தீர்வுகளுடன் புதிய டெண்டரை வெளியிடும் வகையில் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று 3 தொகுப்புகளாக நடைபெற இருந்த பணியை ஒரே தொகுப்பாக சேர்த்து முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் புதிய டெண்டர் விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.