Tamilசெய்திகள்

10வது முறையாக சட்டசபைக்கு செல்லும் துரைமுருகன்

காட்பாடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார்.

காட்பாடியில் முதன் முறையாக 1971-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் வெற்றி வாகை சூடினார்.

பின்னர் ராணிப்பேட்டை தொகுதியில் 1977, 1980-ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பிறகு 1984-ம் ஆண்டு மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 1989-ல் காட்பாடியில் மீண்டும் தி.மு.க. சார்பில் களம் இறங்கிய துரைமுருகன் வெற்றி பெற்றார்.

1991-ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வியிடம் துரைமுருகன் தோல்வியடைந்தார்.

பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதாவது 1996, 2001, 2006, 2011, 2016 என்று தொடர்ந்து 5 முறை துரைமுருகன் வெற்றி பெற்றார்.

ஏற்கனவே 9 முறை காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன் 10-வது முறையாக இந்த தடவை மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 85140 ஓட்டுகள் வாங்கியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராமு 84394 ஓட்டுகள் பெற்றார். 746 ஓட்டு வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றியை தன்வசமாக்கினார். 10 தடவை வெற்றி பெற்ற துரைமுருகன் 1000 ஓட்டுக்குகீழ் வெற்றிபெற்றது இந்த முறைதான்.

துரைமுருகன் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். வெற்றியை தொடர்ந்து 10-வது முறையாக சட்டசபைக்கு துரைமுருகன் மீண்டும் செல்கிறார்.

ராணிப்பேட்டை தொகுதியையும் சேர்த்து மொத்தம் 12 முறை துரைமுருகன் தேர்தல் களத்தை சந்தித்துள்ளார்.

இதில் 2 தடவை தோல்வியை சந்தித்துள்ளார். 10 முறை வெற்றி வாகை சூடியுள்ளார்.