Tamilசெய்திகள்

டெல்லியில் கனரக, சரக்கு வாகனங்களுக்கு தடை!

நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது.

காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழைய கனரக மற்றும் மித ரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள், பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்து அனுப்புகின்றனர். 11-ம் தேதி இரவு 11 மணி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு அபாய அளவை தாண்டியது. நேற்று காலை நிலவரப்படி டெல்லி ஆனந்த் விஹாரில் 999, மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் 999 என அபாயகரமான அளவில் காற்றின் தன்மை இருந்தது.

இன்று சற்று குறைந்துள்ளபோதிலும் அபாய அளவிலேயே உள்ளது. ஆனந்த் விஹாரில் 585, அமெரிக்க தூதரக பகுதியில் 467, ஆர்.கே.புரத்தில் 343 என்ற நிலையில் காற்றின் தரம் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *