நீட் தேர்வை ஒழிக்க உண்மையிலேயே விரும்பினால் முதலமைச்சர் எங்களோடு இணைந்து போராட வேண்டும் – பா.ரஞ்சித் வலியுறுத்தல்
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக நீலம் பண்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நீட் தேர்வை எதிர்த்து அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவுவதற்குக் கண்டனம் தெரிவித்ததுடன், மாணவர்கள் மற்றும் அமைப்புகள் தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டப் போராடுவதற்காகத் தனி இடத்தை அரசு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நீட் தேர்வை ஒழிக்க உண்மையிலேயே விருப்பமிருந்தால், அவ்வாறு ஒதுக்கப்படும் போராட்டக் களத்திற்கு நேரில் வந்து முதலமைச்சர் தங்களோடு இணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், சென்னை சிபிஐ பாலன் இல்லத்தில் தொடர்ந்து அறவழியில் போராடும் இளைஞர்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்றார்.
மேலும், மெரினா கடற்கரையில் மக்கள் கூடிப் போராட முடியாதவாறு முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தவர், அமைச்சரவையில் தலித் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தாலும், அவர்கள் தலித் மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஆதிக்கச் சக்திகளுக்கும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கும் அஞ்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சமரசம் செய்யாமல், மக்களின் பக்கம் நின்று அம்பேத்கர் சிலை திறப்பு உள்ளிட்ட விவகாரங்களில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தினார்.
