டாஸ்மாக் ஊழியர்களுக்கான கட்டாய சீருடை உத்தரவு! – நவம்பர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கட்டாய சீருடை அணியும் முறையைக் கொண்டுவரும் அரசு முடிவுக்கு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாகச் சமூகத்தில் தங்களுக்கு அவமானம் ஏற்படும் என்றும், வேலை நேரத்தில் வங்கிகளில் பணத்தைச் செலுத்தச் செல்லும்போது சீருடையின் அடையாளத்தால் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்கு இலக்காகும் ஆபத்து அதிகரிப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 4,048 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 22,877 ஊழியர்களுக்குச் சீருடை வழங்குவதற்காக கோ ஆப்டெக்ஸ் மூலம் துணிகளை வாங்கி மூன்று ஜோடி சீருடைகளைத் தைத்து அணிய வேண்டும் என்று நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காகத் தலா ரூ.6,000 ஊழியர்களின் வங்கிக் கணக்குகளிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது.
எனினும், பணியாளர்கள் இந்த நடைமுறையை முழுமையாக மறுப்பதுடன், சீருடை அணிந்தால் பொதுமக்கள் மத்தியில் தங்களது நற்பெயரும் சமூக அந்தஸ்தும் பாதிக்கப்படும் என்று வாதிடுகின்றனர். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், நவம்பர் 15ஆம் தேதி முதல் சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறிச் சீருடை அணியாத ஊழியர்கள் மீது கடுமையான துறைசார் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இதற்காக வழங்கப்பட்ட தொகையும் திரும்பப் பெறப்படும் என்றும் டாஸ்மாக் மேலாண்மை நிர்வாகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
