‘பெடல் ஃபார் லிவர்’ என்ற தலைப்பில் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை நடத்திய கொழுப்பு கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிளத்தான்!
கல்லீரல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும், எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை, ‘வட சென்னை சைக்ளிஸ்ட்ஸ்’ அமைப்புடன் இணைந்து 2.5 கி.மீ தூரத்திற்கான “பெடல் ஃபார் லிவர்” (கல்லீரலுக்காக சைக்கிள் ஓட்டுவோம்) என்ற சைக்கிளத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியது. மருத்துவமனையின் வருடாந்திர கல்லீரல் விழிப்புணர்வு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அதிகாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 150-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்த அக்டோபர் மாதத்தில், ‘கொழுப்பு கல்லீரல் நோய்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இம்மருத்துவமனை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
விழிப்புணர்வுக்கான சைக்கிளத்தான் பேரணி நிகழ்வை அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.கே. ராம்குமார் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இம்மருத்துவமனையின் கல்லீரல் நோய்கள், உறுப்புமாற்று சிகிச்சை மற்றும் HPB அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணரும் இயக்குநருமான டாக்டர் தியாகராஜன் சீனிவாசன், முதன்மைச் செயல் அதிகாரி திரு. பத்மநாபன் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் திரு.ராஜேஷ் அகர்வாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொழுப்பு கல்லீரல் நோய்க்கான புதிய மருத்துவச் சொற்றொடரான ‘வளர்சிதை மாற்றக் கோளாறுடன் தொடர்புடைய கொழுப்பு கல்லீரல் நோய்க்கும்’ (MASLD), உடல் பருமன், நீரிழிவு நோய், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை போன்ற ஆபத்துக் காரணிகளுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. பெரும்பாலும் வெளிப்படையாக கவனிக்கத்தக்க அறிகுறிகளின்றி இந்நோய் வளர்ந்து தீவிரமாகும் அபாயம் கொண்டது. இதற்கு உரிய காலத்திற்குள் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கல்லீரல் அழற்சி, கல்லீரல் இழைநார்பெருக்கம் (ஃபைப்ரோஸிஸ்) மற்றும் முற்றிய கல்லீரல் நோய்களுக்கு இது வழிவகுத்து விடும்.
இதுகுறித்து இத்துறையின் இயக்குநரான டாக்டர் தியாகராஜன் சீனிவாசன் பேசுகையில், “நமது உடல்நலத்தின் மற்ற எல்லா உறுப்புகளுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் தரவேண்டியது அவசியம். கொழுப்பு கல்லீரல் நோய் பெரும்பாலும் எவ்வித அறிகுறியும் இன்றி வளர்ந்து தீவிரமடைகிறது. குறிப்பாக அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு இதை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியம். ஃபைப்ரோஸ்கேன் எனப்படும் எளிய, வலியற்ற பரிசோதனை மூலம், கல்லீரல் சுருக்கத்தின் அறிகுறியான கல்லீரல் விறைப்புத்தன்மையை மதிப்பிடலாம்; மேலும் கட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு அளவுரு (CAP) மூலம் கல்லீரலில் உள்ள கொழுப்பின் அளவையும் துல்லியமாகக் கணக்கிட முடியும். இருப்பினும், ஒரு நபரின் மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மருத்துவ நிபுணரே இந்தப் பரிசோதனையின் தேவையினைத் தீர்மானிக்க வேண்டும். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், சரியான மதிப்பீடு மற்றும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் மூலம் நோய் தீவிரமடைவதைத் தடுத்து, நீண்டகாலத்திற்கு கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். சமச்சீரான உணவு, தவறாமல் உடற்பயிற்சி, மது அருந்துவதைத் தவிர்த்தல் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல் ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுக்கப் பெரிதும் உதவும். இன்றைய நாளிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உகந்த சிறிய, நிலையான மாற்றங்களைச் செய்வது மிகவும் முக்கியம்” என்று கூறினார்.
“கல்லீரல் சிகிச்சை நிபுணர்கள், குடல்-இரைப்பை நிபுணர்கள், பொது மருத்துவர்கள், நாளமில்லா சுரப்பி நிபுணர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவினர் ஒன்றிணைந்து, MASLD நோயைக் கண்டறிவதற்கான மருத்துவத் தரநிலைகளை உருவாக்கியுள்ளனர். மேலும், ஃபைப்ரோஸ்கேன் போன்ற உடலைத் துளைக்காத எளிய பரிசோதனைகளின் பயன்பாட்டை முறைப்படுத்தவும், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை வரையிலான சிகிச்சை முறைகளைத் தெளிவாக வரையறுக்கவும் இந்த நிபுணர் குழு சீரிய முறையில் செயல்பட்டது. மருத்துவத்துறையினருக்கு இது குறித்த வழிகாட்டுதலை வழங்குவதற்காக, மருத்துவமனை சார்பில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதியன்று ‘வளர்சிதை மாற்றக் கோளாறு தொடர்பான கல்லீரல் கொழுப்பு நோய் குறித்த நடைமுறை அப்டேட்’ என்ற தலைப்பில் தொடர் மருத்துவக் கல்வி (CME) நிகழ்ச்சி ஒன்றும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 120-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு, இந்நோய்க்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக அறிந்துகொண்டதோடு, மக்களிடையே இதற்கான விழிப்புணர்வைப் பரப்புவதற்கான தகவல்களையும் பெற்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சைக்கிளத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பதிவு செய்த பங்கேற்பாளர்கள் எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஃபைப்ரோஸ்கேன் பரிசோதனை செய்து கொள்வதற்கான 50% தள்ளுபடி கூப்பனைப் பெற்றுக் கொள்ளலாம். கல்லீரல் ஆரோக்கிய மதிப்பீடு குறித்தும், நோய்த் தடுப்புப் பராமரிப்பிற்காக சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதுமே இதன் தலையாய நோக்கமாகும்.
இந்த சைக்கிளத்தான் நிகழ்வின் மூலம், பொதுமக்கள் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைத் தங்களின் அன்றாட வாழ்க்கை முறையில் இணைத்துக்கொள்ள ஊக்குவிப்பதை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நோக்கமாகக் கொண்டுள்ளது. சமுதாயத்தில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல், உடல்நல அபாயங்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நோயாளிகளை மையமாகக் கொண்ட நோய்த்தடுப்புப் பராமரிப்பு ஆகியவற்றுக்கான தங்களின் அர்ப்பணிப்பை இம்மருத்துவமனை இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்துகிறது. “ஒரு நல்ல நோக்கத்திற்காக பயணிப்போம். விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். கல்லீரல் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுப்போம்!” என்பதே இந்த நிகழ்வின் எளிய மற்றும் வலிமையான செய்தியாகும்.
