நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – வெற்றி விளிம்பில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது. கேப்டன் கேன் வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் சோகைல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதன்பின், ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 83.2 ஓவர்களில் 227 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாபர் அசாம் மட்டும் தாக்குப் பிடித்து 62 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், கிரான்ட்ஹோம், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜீத் ராவல் 46 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 37 ரன்னிலும் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களும், வாட்லிங் 59 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 100.4 ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாள்கள் உள்ள நிலையில், 139 ரன்கள் மட்டும் எடுக்க வேண்டி இருப்பதால் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.