Tamilசெய்திகள்

சிம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை – பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை

பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட 84 வயது முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, ஒரே ஒரு சிறிய துளை வழியே செய்யப்படும் நவீன எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையைச் செய்து சென்னை சிம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குணமளித்திருக்கின்றனர். வெறும் 8 மி.மீ அளவிலான சிறிய துளை மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிநவீன ‘யூனிபோர்ட்டல் எண்டோஸ்கோபிக்’ சிகிச்சை, முதியவரின் தண்டுவட நரம்பு அழுத்தத்தை முழுமையாக நீக்கி, அவரை மீண்டும் தன் சொந்தக் கால்களில் நடக்க வைத்துள்ளது.

இந்த அறுவை சிகிச்சை பல காரணங்களால் மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது. நோயாளிக்கு இருந்த தீவிர முதுகெலும்பு வளைவுப் பாதிப்பு, அவரது முதுகெலும்பின் இயல்பான அமைப்பைப் பெருமளவில் மாற்றியமைத்ததோடு, தண்டுவட நரம்புகளைச் சுற்றியுள்ள இடைவெளியையும் மிகவும் சுருக்கியிருந்தது. உடற்கூறியலில் ஏற்பட்ட இந்த மாறுபாடு காரணமாக, ஒற்றைத் துளை எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்வது தொழில்நுட்ப ரீதியாகப் பெரும் சவாலாக மாறியது. வெறும் 8 மி.மீ அளவுள்ள ஒரே ஒரு துளையின் வழியே, அழுத்தப்பட்ட நரம்பு அமைப்புகளைப் பாதுகாப்பாகக் கையாண்டு இந்த அறுவை சிகிச்சையைச் செய்ய அசாத்திய துல்லியமும் திறனும் தேவைப்பட்டது.

மேலும், நோயாளிக்கு ஏற்கனவே இருந்த இதய நோய் பாதிப்பு இந்தச் சவாலை மேலும் அதிக சிக்கலானதாக ஆக்கியிருந்தது. அவர் ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை (CABG) செய்துகொண்டவர் என்பதோடு, அவரது இதயத்தில் நிரந்தர பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டிருந்தது. இந்த அம்சங்கள் அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து அளிப்பதில் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், நோயாளியின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், நரம்பு அழுத்தத்தை வெற்றிகரமாகச் சரிசெய்யவும் பல்துறை மருத்துவ நிபுணர்களின் நுணுக்கமான திட்டமிடலும், அறுவை சிகிச்சையின் போது அவர்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாடும் அவசியமாக இருந்தது.

இந்தச் சாதனை சிகிச்சையை சிம்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் மற்றும் தண்டுவட சிகிச்சை நிபுணர்களான டாக்டர் ஜி. வெங்கடேஷ் குமார், டாக்டர் விக்னேஷ் ஜெயபாலன் மற்றும் இதய நோய் நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கின்றனர்.

இதுகுறித்து டாக்டர் வெங்கடேஷ் குமார் கூறுகையில்: “இந்த முதிய நோயாளி கடுமையான வலியால் நடமாட்டமின்றி, எமது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தாங்க முடியாத வலியின் காரணமாக அவரால் சில அடி தூரம் வரை கூட நடக்க முடியவில்லை. பரிசோதனையில், அவருக்குத் தண்டுவடத்தில் ஏற்பட்ட வளைவு காரணமாக, இடுப்புப் பகுதியில் நரம்புகள் கடுமையாக அழுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பொதுவாக இதுபோன்ற பாதிப்புகளுக்கு தண்டுவடத்தில் ராடுகள் மற்றும் ஸ்க்ரூக்களைப் பொருத்திப் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். ஆனால், தண்டுவட சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வெறும் 8 மி.மீ துளை வழியே எண்டோஸ்கோபிக் முறையில் நரம்பு அழுத்தத்தை எங்களால் வெற்றிகரமாக நீக்க முடிந்தது. அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே வலி எதுவுமின்றி நோயாளியால் நடக்க முடிந்தது” என்றார்.

டாக்டர் விக்னேஷ் ஜெயபாலன் மேலும் பேசுகையில்: “வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடும்போது, மேம்பட்ட, நவீன எண்டோஸ்கோபிக் சிகிச்சை உத்தியின் மிகப்பெரிய ஆதாயங்களுள் ஒன்றாக இருப்பது, அறுவைசிகிச்சை செய்யப்படும் இடத்திற்கு அருகிலுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கும், தசைகளுக்கும் மிக மிக குறைவான பாதிப்பிற்கே சாத்தியம் இருக்கும்; எதிர்பார்க்கப்படும் சிறப்பான சிகிச்சை விளைவு உறுதி செய்யப்படுகிறது. இதில் ரத்த இழப்பு என்பது மிக மிகக் குறைவு; தையல்களோ, காயத்தழும்புகளோ இருக்காது. வலியும் குறைவாக இருப்பதால் நோயாளி மிக வேகமாக குணமடைய முடியும். தண்டுவடத்தின் இயற்கையான அமைப்பைப் பாதிக்காமல், நரம்பு அழுத்தத்திற்கும், வலிக்கும் காரணமான நோய் பாதிப்பு ஏற்பட்ட திசுவை மட்டும் துல்லியமாக அகற்றுவதே எங்களின் குறிக்கோள். அந்த குறிக்கோளில் நாங்கள் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறோம்.” என்றார்.

எலும்பியல் துறையின் இணை இயக்குநரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் விஜய் சி. போஸ் கூறியதாவது: “எலும்பியல் மருத்துவத் துறை மிகவும் பரந்துபட்டது; தொடர் ஆராய்ச்சிகள் இதை மென்மேலும் விரிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. எனவே, துறை சார்ந்த அனைத்து சிறப்பு பிரிவுகளிலும் ஒரு மருத்துவரே முழுமையான நிபுணத்துவம் பெற்றிருப்பது என்பது இயலாத காரியம். சிம்ஸ் மருத்துவமனையில், எலும்பியல் துறையின் கீழ் ஐந்து தனித்தனி துணைப் பிரிவுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், விளையாட்டுத் துறையில் ஏற்படும் காயங்கள், விபத்துக் காயங்கள் (ட்ராமா), மற்றும் பாதம்-கணுக்கால் சார்ந்த பாதிப்புகள் என ஒவ்வொரு பிரிவும் ஒரு குறிப்பிட்ட சிகிச்சையில் தனிக் கவனம் செலுத்திச் செயல்படுகிறது. நாடு முழுவதும் மிகச் சில மருத்துவ நிறுவனங்கள் மட்டுமே இதுபோன்ற அனைத்துச் சிறப்பு மருத்துவப் பிரிவுகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுள்ளன; அத்தகைய உயர்சிறப்பு மையங்களுள் ஒன்றாக நாங்கள் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அந்த வகையில், நாங்கள் கையாண்ட இந்த குறிப்பிட்ட சிகிச்சை நேர்வு, முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சிகர முன்னேற்றத்தை குறிக்கிறது.”

சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கூறுகையில்: “இந்தச் சாதனை, வாடிக்கையாளர்களின் நலனை முதன்மை குறிக்கோளாக கொண்டு, புதுமையான, மேம்பட்ட மருத்துவச் சேவையை வழங்குவதில் சிம்ஸ் மருத்துவமனை கொண்டுள்ள அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. சென்னை மாநகரில் மிகச் சில சிறப்பு நிபுணர்கள் மட்டுமே இந்த ‘யூனிபோர்ட்டல் எண்டோஸ்கோபிக்’ தண்டுவட அறுவை சிகிச்சையைச் செய்கிறார்கள். அறுவைசிகிச்சை தழும்புகள் இல்லாமல், மிக வேகமாக குணமடைதலைத் தரும் நவீன சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் வழியாக, மிக சிக்கலான பாதிப்புகளுக்கும் சிறப்பான சிகிச்சையின் மூலம் மருத்துவ சேவையை வழங்கி நோயாளிகளின் நலனை உறுதிசெய்வதில் சிம்ஸ் மருத்துவமனையில் எங்களது கனிவான, அர்ப்பணிப்பு மிக்க சேவை இனியும் தீவிரமாக தொடரும்” என்றார்.