Tamilசெய்திகள்

இன்று (ஜூன் 15) உலகக் காற்று தினம்

அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ ஆதாரமாக விளங்கும் காற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் தேதி உலகக் காற்று தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் அதிகரிக்கும் தொழிற்சாலைகள், வாகனங்கள், ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களின் பயன்பாட்டால் காற்று பெருமளவில் மாசுபடுவதோடு, இதனால் உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கும் அவலமும் ஏற்படுகிறது. குறிப்பாக, இந்திய நாடு காற்று மாசில் உலக அளவில் முதல் ஐந்து இடங்களில் இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

அறிவியல் ரீதியாக சூரியனில் இருந்து வெளியேறும் வளிமங்கள் சூரியக் காற்று எனவும், கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்கள் வெளியேற்றத்தைக் கோள் காற்று எனவும், குறைந்த நேரத்தில் மிக வேகமாக வீசும் காற்று வன் காற்று எனவும், நீண்ட நேரம் நீடிக்கும் பலமான காற்று சூறாவளி எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், “Clean Air, Healthy Choices: Acting Together for People and Planet” (தூய காற்று, ஆரோக்கியமான தேர்வுகள்: மக்களுக்கும் கிரகத்துக்கும் ஒன்றிணைந்து செயல்படுவோம்) என்ற நடப்பு ஆண்டின் மையக்கருத்தோடு இத்தினம் கவனம் பெறுகிறது.

தாவரத்தின் விதைகளைச் சிதறடிப்பதன் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதோடு, பூமியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும் உதவும் காற்றைப் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை உபயோகிப்பது, புவி வெப்பமடைதல் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வாக அமையும்.

மேலும், காற்று அதிகமாக வீசும் இடங்களில் காற்றாலைகளை அமைத்து, குறைந்த செலவில் மின் ஆற்றலை உருவாக்குவது கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து சுற்றுச்சூழலை அரணாகப் பாதுகாக்கும் என்பதால், இந்த நாளில் காற்றை மாசுபடுத்தும் வழிமுறைகளைக் கண்டறிந்து, மாசுபாட்டைக் குறைத்து இயற்கையைக் காக்க உறுதியேற்போம்.