Tamilசெய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 15 ஆம் தேதி தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் வக்கீல் பரணிகுமார் மூலம் செந்தில் பாலாஜி அதே கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், ‘மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும்’ என வாதாடினார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் என்.ரமேஷ், ‘வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.

செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 15-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.