Tamilசெய்திகள்

இன்று நடைபெற இருந்த முல்லைப்பெரியாறு அணை ஆய்வு ஒத்தி வைப்பு

முல்லைப்பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரையின் பேரில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய் சரண் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரள அரசு சார்பில் தலா 2 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணிகள் குறித்து இக்குழு ஆலோசனை வழங்கும். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டு மார்ச் 27-ந் தேதி இந்த குழு ஆய்வு நடத்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு இன்று ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக நீர்வளத்துறையினர் செய்திருந்தனர்.

ஆனால் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இன்று நடைபெற இருந்த ஆய்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 64.60 அடியாக உள்ளது. 363 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.