Tamilசெய்திகள்

இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.

அதைத் தொடர்ந்து மக்கள் தீர்ப்பை மதித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. அதிபரும், மந்திரிசபையும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மகிந்த ராஜபக்சே கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கே நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக தனது அண்ணன் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார் கோத்தபய ராஜபக்சே.

இந்நிலையில் புதிய பிரதமர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. கொழும்பில் உள்ள பாராளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் வரை, மகிந்த தலைமையிலான இடைக்கால அரசு, வழக்கமான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *