Tamilசெய்திகள்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா – பங்கேற்க விரும்பும் இந்திய பக்தர்கள் பிப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலய திருவிழா பிப்.23 ஆம் தேதி தொடங்குகிறது. விழாவின் முதல் நாள் கொடியேற்றம் மற்றும் தேர்பவனி நடைபெறும். இரண்டாவது நாளான பிப்.24 அன்று சிறப்பு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும்.

இந்த இரண்டு நாள் திருவிழாவில், இந்திய, இலங்கை பக்தர்கள் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் கச்சத்தீவு செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில், இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் பிப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சத்யதாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கச்சத்தீவு திருவிழா செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிப்.6க்குள் கொடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த பக்தர்கள் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் படகில் கொண்டு செல்லக்கூடாது” எனத் தெரிவித்தார்