Tamilவிளையாட்டு

கேப்டனாக டோனி நிகழ்த்தாத சாதனைகளை நிகழ்த்திய ரோகித் சர்மா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் தலைமையில் ஆசிய கோப்பையை இந்தியா 2-வது முறையாக வென்றுள்ளது.

ரோகித் 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஆசிய கோப்பையில் விளையாடினார். அதன் பின் 2010, 2016 ஆகிய தொடர்களிலும் விளையாடினார். மேலும் 2018 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு ஆசிய கோப்பையை கைப்பற்றினார்.

அந்த வகையில் 2008, 2010, 2016, 2018, 2023* ஆகிய 5 தொடர்களில் விளையாடியுள்ள அவர் வரலாற்றில் அதிக ஆசிய கோப்பைகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சச்சின், டோனி உட்பட வேறு யாரும் படைக்காத சாதனை படைத்துள்ளார்.

அதே போல ஆசிய கோப்பை வரலாற்றில் 2 சாம்பியன் பட்டங்களை (2018, 2023) வென்ற இந்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் மற்றும் எம்எஸ் டோனி ஆகியோரது சாதனைகளையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

அத்துடன் 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் ரோஹித் தலைமையில் 10 விக்கெட் வித்யாசத்தில் வென்ற இந்தியா இந்த தொடரில் நேபாளுக்கு எதிரான போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த நிலையில் நேற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை 10 வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற யாராலும் தொட முடியாத சாதனை ரோகித் படைத்துள்ளார்.

ஏனெனில் இதற்கு முன் சீனிவாசன் வெங்கட்ராகவன், சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், டோனி, கேஎல் ராகுல் ஆகியோர் தலைமையில் தலா 1 முறை மட்டுமே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. இது போக கடந்த ஜனவரியில் இதே இலங்கைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் தலைமையில் வென்ற இந்தியா நேற்று 6.1 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து வென்றது.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் (317) வித்தியாசத்திலும் அதிக பந்துகள் (263) வித்தியாசத்திலும் அதிவேகத்தில் சேசிங் செய்தும் (6.1 ஓவர்களில்) வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற 3 சரித்திரத்தையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.