Tamilசெய்திகள்

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலரோ பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, கடலூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.