சென்னை பன்னாட்டு விமான நிலைய டாக்ஸி அக்ரிகேட்டர்களுக்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் எச்சரிக்கை!
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்படும் டாக்ஸி அக்ரிகேட்டர்களுக்கு (Cab Aggregators) இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. உறுதி செய்யப்பட்ட சவாரிகளைத் தன்னிச்சையாக ரத்து செய்வதும், செயலியில் (App) காட்டும் கட்டணத்தை மதிக்காமல் கூடுதல் கட்டணம் கோருவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு விமான நிலையத்தில் தொழில் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பயணி ஒருவர் செயலி கட்டணத்தைப் புறக்கணித்து ஓட்டுநர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கட்டணம் கேட்பதாகச் சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி, டெல்லியிலிருந்து திரும்பிய மார்ட்டின் லூயிஸ் என்ற பயணி, முகலிவாக்கம் செல்வதற்குச் செயலியில் காட்டப்பட்ட ₹450-க்கு பதிலாக ஓட்டுநர் ₹750 கேட்டதால் வேறு வழியின்றி ஆட்டோ பிடித்துச் சென்றதாகத் தன் வேதனையைப் பகிர்ந்துள்ளார். மேலும், சிலர் செயலி வழியாகப் பணப் பரிவர்த்தனை செய்ய மறுத்துத் தனிப்பட்ட கணக்கிற்குப் பணம் அனுப்பச் சொல்லி வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க பயணிகள் முதலில் கேப் பிக்-அப் பிளாசா அல்லது வெஸ்ட் மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் உள்ள அக்ரிகேட்டர் கவுண்டர்களில் புகார் அளிக்கலாம், அல்லது சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குத் தீர்வு கிடைக்காவிட்டால் 044-22560551, 044-22560512 ஆகிய எண்களிலோ அல்லது விமான நிலைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களிலோ நேரடியாகப் புகாரளிக்கலாம் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் AAI உறுதியளித்துள்ளது.
