Tamilவிளையாட்டு

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி

19 வயதுக்குட்பட்டோருக்கான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. “ஏ” பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் “பி” பிரிவில், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மல்லுக்கட்டின. “டாஸ்” வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. ஆதர்ஷ் சிங் (62 ரன்), கேப்டன் உதய் சாஹரன் (60 ரன்), சச்சின் தாஸ் (58 ரன்) அரைசதம் அடித்தனர். உதிரியாக 17 வைடு உள்பட 20 ரன்கள் கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஜீஷன் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சமைல் ஹூசைன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடி இந்திய பவுலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஷசாயிப் கான் 63 ரன்கள் திரட்டினார்.

3-வது விக்கெட்டுக்கு அசன் அவைசும், கேப்டன் சாத் பெய்க்கும் கூட்டணி போட்டு அணியை சிக்கலின்றி இலக்கை நோக்கி பயணிக்க வைத்தனர். 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. பாகிஸ்தான் 47 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசன் அவைஸ் 105 ரன்களுடனும் (130 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் சாத் பெய்க் 68 ரன்களுடனும் (51 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

2-வது லீக்கில் ஆடிய இந்திய அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். இந்தியா தனது கடைசி லீக்கில் நேபாளத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) சந்திக்கிறது. அரைஇறுதிக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 73 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை சாய்த்தது. இதில் ஜம்ஷித் ஜட்ரனின் சதத்தின் (106 ரன்) உதவியுடன் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 262 ரன் இலக்கை நோக்கி ஆடிய நேபாளம் 40.1 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 262 ரன் இலக்கை நோக்கி ஆடிய நேபாளம் 40.1 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் தனது கடைசி லீக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டும்.