Tamilசினிமா

தியேட்டர் டிக்கெட் விலை உயர்வால் சிறிய படங்கள் பாதிக்கும் – திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து

தமிழகத்தில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டு உயர்த்தப்பட்டது. இதற்கு பின்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இந்தநிலையில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதிக்ககோரி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கட்டண விகிதம் அதிகரித்து 6 ஆண்டுகள் கடந்துவிட்டன. செலவுகள் அதிகரித்து விட்டதால் தியேட்டர் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே கட்டணங்களை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கையின் படி ஜி.எஸ்.டி. அல்லாமல் உயர்த்த விரும்பும் டிக்கெட் கட்டணங்கள் வருமாறு:- மல்டி பிளக்ஸ் ஏசி தியேட்டர் கட்டணம் ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி அல்லாத தியேட்டர் கட்டணம் ரூ.80-ல் இருந்து ரூ.120 ஆகவும் தினசரி இருக்கை உறைகளை மாற்றும் திரையரங்குகளில் கட்டணம் ரூ.350 ஆகவும், எபிக் திரை கொண்ட தியேட்டருக்கு ரூ.400 ஆகவும், ஐ மேக்ஸ் திரை கொண்ட தியேட்டருக்கு ரூ.450 ஆகவும் உயர்த்த வேண்டும் என அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் டிக்கெட் கட்டண உயர்வுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஏற்கனவே பெரும்பாலான திரைப்படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடுவது அதிகரித்து வரும் நிலையில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டால் ரசிகர்களின் வருகை குறையும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கட்டணத்தை உயர்த்த கோரி அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் எம்.சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த கட்டண உயர்வு கோரிக்கையை நாங்கள் விரும்பவில்லை. ஏற்கனவே திரையரங்கங்களுக்கு மக்கள் வருவது குறைந்து வருகிறது. மேலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தினால் கூட்டம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக தியேட்டர் பராமரிப்பு கட்டணத்தை மாற்றி அமைத்து கேளிக்கை வரியையும் மீண்டும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.