Tamilசினிமா

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு மேற்கு வங்கத்தில் தடை

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.