Tamilசெய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன்படி, தாம்பரம்- நெல்லை இடையேயான சிறப்பு ரெயில் (வ.எண்.06049) தாம்பரத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06050) நெல்லையில் இருந்து வருகிற 26-ந் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல, சென்னை சென்டிரல்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06041) நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06042) ராமேசுவரத்தில் இருந்து வருகிற 24-ந் தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும். இதேபோல் நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு சிறப்பு ரெயில் (வ.எண்.06040) நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 25-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 3.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.