Tamilசெய்திகள்

தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்

 

துபாயில் கடந்த அக்டோபா் 1-ல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசுமுறை பயணமாக சென்னையில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார். துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்திய தூதர் அமன் பூரி வரவேற்றார். துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரங்கை நாளை நேரில் சென்று திறந்து வைக்கிறாா்.

தொழில், மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ் வளா்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் தமிழ்நாடு அரங்கில் திரையிடப்படவுள்ளன.

துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவா்களுடனான சந்திப்பு ஆகியனவும் நடைபெறவுள்ளன. மேலும், புலம்பெயா் தமிழா்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் உள்பட அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.