Tamilசெய்திகள்

நீலகிரி மாவட்டம், வால்பாறை பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக முதலில் நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில ஆளுகைக்கு உட்பட்ட கேரளாவில் உள்ள மாகே-விலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின் வால்பாறையில் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் நீர்வரத்து அதிகரித்து கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, கருமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு மற்றும் கருமலை இறைச்சல் பாறை ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இது தவிர நீர்வீழ்ச்சிகள், தடுப்பணைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.