Tamilசெய்திகள்

பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் – அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2023-2024 ஆண்டு கரும்பு பருவத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 10 ரூபாய் உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனால், குவிண்டாலுக்கு ரூ.305 ஆக இருந்த கரும்பு விலை, ரூ.315 ஆக உயர்கிறது.

இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் அரசு முன்னுரிமை அளிக்கிறது. 2014-2015 பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.210 ஆக இருந்த கரும்பின் குறைந்தபட்ச ஆதரவு விலை, தற்போது ரூ.315 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிக்க நிதி உதவி அளிக்கும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதாவை கொண்டுவர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே உள்ள அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரிய சட்டம் நீக்கப்பட்டு, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பிரதமர் மோடி தலைமையில் 15 முதல் 25 பிரபல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய ஆட்சிமன்ற குழுவால் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வகிக்கப்படும் என தெரிவித்தார்.