Tamilசெய்திகள்

மகராஷ்டிராவில் பெட்ரோல் நிலையங்கள் முன்பு குவிந்த மக்களால் பரபரப்பு

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என டிரைவர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் மகாராஷ்டிரா மாநிலத்தில், முன்னெச்சரிக்கை காரணமாக வாகனங்களில் முழுமையாக எரிபொருளை நிரப்பிக் கொள்ள பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்கள் (Pertrol Pumps) படையெடுத்துள்ள நிலையில் உள்ளனர். இதனால் கடும் கூட்டம் கூடி வரும் நிலையில் எரிபொருள் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாக்பூர், தானே, ஜல்கான், துலியா ஆகிய இடங்களில் எரிபொருள் நிரப்ப பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். நாக்பூரில் உள்ளூர் போலீசார் கூட்டம் அதிகமான இடங்களில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாக்பூரில் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டால் பெட்ரோல் இல்லை (No Petrol) என போர்டு வைக்கப்படும் நிலை உருவாகும் என பெட்ரோல் நிலைய மானேஜர்கள் தெரிவித்துள்ளனர். நாசிக்கில் டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றால், நாசிக்கில் ஏராளமான பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என அந்த மாவட்டத்தின் பெட்ரோல் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மும்பையில் நேற்றிரவு 150 பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வினியோகம் செய்யப்பட்டது. எனினும், அச்சம் காரணமாக மக்கள் தேவைக்கு அதிகமான அளவில் எரிபொருள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் கடினமான நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பழைய சட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசு பாரதிய நியாய சம்ஹிதா (Bharatiya Nyay Sanhita) சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி கவனக்குறைவு காரணமாக டிரைவர்கள் கவலை அளிக்கும் விதமான விபத்தை ஏற்படுத்திவிட்டு காவல்துறை அல்லது எந்தவொரு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் ஓடினால், 10 வருடம் தண்டனை அல்லது ஏழு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.