Tamilசெய்திகள்

மாற்றம் வந்தால் மட்டுமே கேரளாவுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும் – பிரதமர் மோடி பேச்சு

தமிழகத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் மதியத்துக்கு மேல் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

சுவாமியே சரணம் ஐயப்பா என கூறியபடி அவர் பேச்சை தொடங்கினார். பிறகு அவர் பேசுகையில் கூறியதாவது:-

கேரளாவில் ஊழலுக்கு பெயர் போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. இந்த கட்சிகளை ஜனநாயக முறைப்படி ஒழிக்க மக்கள் முன்வர வேண்டும். கேரளாவில் ரப்பர் தொழில் நலிவடைந்து வருகிறது. ரப்பர் தொழிலாளர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கண்டும் காணாதது போல் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் நடித்து வருகிறது.

கேரளாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கிறிஸ்தவ ஆலயங்களில் அருட்தந்தைகள் தாக்கப்படுகிறார்கள். கல்லூரிகள் கம்யூனிஸ்டுகளின் கூடாரங்களாக மாறியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தநிலை மாற வேண்டுமானால் மாறி மாறி வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் அரசுகள் மாற்றப்பட வேண்டும். மாற்றம் வந்தால் மட்டுமே கேரளாவுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும். கேரளாவில் இந்த முறை தாமரை மலரும். 10-க்கும் மேற்பட்ட பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தேசிய அளவில் பா.ஜனதா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. கேரளாவில் இளைஞர்களிடையே புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அனில் அந்தோணி இளைஞர்களின் அடையாளம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பத்தனம்திட்டா பிரசாரத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, தெலுங்கானா மாநிலம் சென்றார். அங்கு மல்காஜ்கிரி பாராளுமன்ற தொகுதியில் ‘ரோடுஷோ’ நடத்தினார். காவி நிற தொப்பி அணிந்தபடி, திறந்த வாகனத்தில் நின்று கொண்டு, சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்களை நோக்கி கையசைத்து மோடி வாழ்த்து தெரிவித்தார். சிலர் பிரதமரை பார்ப்பதற்காக கட்டிடங்களின் மொட்டை மாடியில் நின்றனர்.

இந்த ரோடுஷோவின்போது சாலைகளின் இருபுறமும் திரண்டு நின்றவர்கள், ‘மோடி, மோடி’, ‘பாரத் மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை எழுப்பினர். இன்று (சனிக்கிழமை) நாகர்கர்னூலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.