Tamilவிளையாட்டு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் கூட்டம் அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றுபவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. பாலின பாகுபாடின்றி அவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியமே வழங்கப்படும். ஜனவரியில் இருந்து புதிய முறை நடைமுறைக்கு வருகிறது.

மற்றொரு முக்கிய முடிவாக புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஆபரேஷன் மற்றும் பாலின மறுசீரமைப்பு சிகிச்சை முறைகள் மூலம் பெண்ணாக மாறினாலும் அவர் ஒரு போதும் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உங்களது விளையாட்டுக்கு எது சரியாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப பாலின தகுதி கொள்கையை நிர்ணயித்து கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கியது. இதன்படியே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இதற்காக கடந்த 9 மாதங்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ஐ.சி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் உள்ளூர் போட்டிகளில் பாலின தகுதி வரைமுறையை பின்பற்றும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது.