Tamilசெய்திகள்

மாணவர் விடுதி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து எதிரொலி – கூட்டு ஆய்வில் விடுதிகளின் கட்டணக் கொள்ளை அம்பலம்

டெல்லி சத்தியா நிகேதன் பகுதியில் மாணவர் விடுதி கட்டடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கம் (SFI), DYFI, DTF, AIDWA உள்ளிட்ட பல்வேறு மாணவர் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து 117 மாணவர்களிடம் நடத்திய கூட்டு ஆய்வில், தனியார் விடுதிகளின் (PG) ஆபத்தான சூழலும், அநியாயக் கட்டணக் கொள்ளையும் அம்பலமாகியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகக் கல்லூரிகளில் போதிய விடுதி வசதிகள் இல்லாததால் தனியார் விடுதிகளை நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் மாணவர்களிடம், எவ்வித ஒழுங்குமுறையும் இன்றி மாதம் ரூ.5,000 முதல் ரூ.30,000 வரை வாடகையாகவும், முன்பணமாக ரூ.50,000 வரையிலும் வசூலிக்கப்படுவதோடு, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.11 முதல் ரூ.15 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், 66 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளையே விரும்புவதாகவும், 79 சதவீத மாணவர்கள் இத்தகைய பாதுகாப்பற்ற தனியார் விடுதிகளில் தங்குவதற்கு அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ள நிலையில், தனியார் விடுதிகளை முறைப்படுத்தக் கண்டிப்பான உரிம நடைமுறைகள், தொடர் பாதுகாப்புத் தணிக்கைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கூடுதல் விடுதி வசதிகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என மாணவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.