நிலுவையில் உள்ள இ-சலான் அபராதக் கட்டணங்கள் பற்றி அறிந்துக் கொள்ள சிறப்பு அழைப்பு மையங்கள் அமைப்பு
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் தங்களது நிலுவையில் உள்ள “இ-சலான்” (E-Challan) அபராதக் கட்டண விபரங்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் சிறப்பு அழைப்பு மையங்கள் (Call Centres) அமைக்கப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 21.09.2026 முதல் 30.09.2026 வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை நகரின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் தலைமையகம் என 5 மண்டலங்களில் K2 அயனாவரம், E2 ராயப்பேட்டை, E4 அபிராமபுரம், ராயப்பேட்டை மணிக்கூண்டு, அண்ணா நகர் ரவுண்டானா, அண்ணா வளைவு, மதுரவாயல், மாதவரம், C2 யானைகவுனி, H5 புது வண்ணாரப்பேட்டை, K1 செம்பியம், R1 மாம்பலம், J2 அடையாறு, கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள புனித தோமையர்மலை மையம் மற்றும் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள ITMS தலைமையகம் உட்பட மொத்தம் 15 இடங்களில் இந்த அழைப்பு மையங்கள் செயல்படவுள்ளன.
அபராத விபரங்களை அறிந்து உடனடியாகச் செலுத்த இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
