யமுனை உள்ளிட்ட நதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை! – டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி மற்றும் துர்கா பூஜை பண்டிகை கொண்டாட்டங்களின் போது, டெல்லியில் உள்ள யமுனை நதி மற்றும் பிற பொது நீர்நிலைகளில் சுவாமி சிலைகளைக் கரைப்பதற்கு டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (DPCC) முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது.
நதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த உத்தரவை மீறி, யமுனை ஆற்றிலோ அல்லது பிற நீர்நிலைகளிலோ சிலைகளைக் கரைப்போருக்கு ரூ.50,000 சுற்றுச்சூழல் அபராதம் விதிக்கப்படும் என்றும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) மற்றும் நச்சு இரசாயன வர்ணங்களால் செய்யப்பட்ட சிலைகளால் நீர்நிலைகள் பெருமளவில் மாசடைவதைத் தடுக்கும் பொருட்டு, பொதுமக்களின் வசதிக்காகத் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே தற்காலிகச் செயற்கைக் குளங்கள் அமைக்கப்பட உள்ளன. அத்துடன், பொதுமக்கள் அனைவரும் களிமண்ணால் செய்யப்பட்ட இயற்கைச் சாயங்கள் பூசப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
