Tamilசெய்திகள்

சென்னையில் தீபாவளி பாதுகாப்பு பணிகள் தீவிரம் – பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு

சென்னையில் மற்ற பகுதிகளை விட தி.நகர் பகுதியில் தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அங்கு தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் தி.நகரில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் மற்றும் அருகிலுள்ள இன்னொரு சாலையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் தி.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் மட்டும் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தாலிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தி.நகரில் மட்டும் 80 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமரா காட்சிகளின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் சில தினங்களில் கமிஷனர் அருண் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். மாதத்தின் தொடக்க நாளாகவும் ஞாயிற்றுக்கிழமையாகவும் இருப்பதால் இன்று மாலையில் தி.நகர் பகுதியில் பலர் ஜவுளி எடுக்க அதிக அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தீபாவளியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் தீபாவளியையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

அனைத்து பகுதிகளிலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென கமிஷனர் அருண் அறிவுறுத்தி இருக்கிறார். இதன்படி இணை கமிஷனர்கள் துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.