விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் , கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. விடுமுறை நாளான நேற்று (ஏப்ரல் 19) இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
பிற்பகல் 3.30 மணியளவில் சரவேடி தயாரித்த அறையில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதனால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன. இதனால் மூன்று அறைகள் தரைமட்டமானது. இந்த விபத்தில் இன்று(ஏப்ரல் 20) காலை வரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்டாசு ஆலை அறைகள் தரைமட்டமானதால் அதன் அடியில் யாரும் சிக்கியிருக்கலாம் என பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தேடுதல் பணி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மீண்டும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் விருதுநகர் உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன், மகளிர் காவலர்கள் சுபா, கவிதா, காவலர்கள் வேல்முருகன், அய்யனார், போக்லைன் இயந்திர ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்களும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
