Tamilவிளையாட்டு

லாராவின் 400 ரன்கள் சாதனையை ஸ்மித் முறியடிப்பார் – முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி வந்த டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடக்க வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பலரது பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஸ்டீவ் ஸ்மித்தை தொடர்ந்து வீரராக களம் இறக்கவும் ஆலோசிக்கிறார்கள்.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து வீரராக களம் இறங்கினால் லாராவின் 400 ரன் சாதனையை முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டெஸ்ட் போட்டியில் ஸ்மித்துக்கு தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கொடுத்தால் அவர் 12 மாதங்களுக்குள் நம்பர்-1 டெஸ்ட் தொடக்க வீரராக இருப்பார். அவர் ஒரு சிறந்த வீரர். ஸ்மித் தொடக்க வீரராக விளையாடும் பட்சத்தில் அவர் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த லாராவின் 400 ரன் சாதனையை முறியடித்தால் கூட ஆச்சரியப்பட வேண்டாம். அந்த சாதனையை படைத்த ஸ்மித் தகுதி உள்ளவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுமித், டெஸ்ட் போட்டியில் தற்போது 4-வது வீரராக களம் இறங்கி வருகிறார். 105 போட்டியில் 9514 ரன்கள் எடுத்துள்ளார். 32 சதங்கள், 40 அரை சதங்கள் அடித்துள்ளார். 4-வது வரிசையில் களம் இறங்கி 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்கள் எடுத்து உள்ளார். சராசரி 61.51 சதவீதம் ஆகும். 3-வது வரிசையில் 11 முறை களம் இறங்கி 1744 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.