Tamilசெய்திகள்

வாங்கும் சம்பளத்திற்கு போலீஸ்காரர்கள் நியாயமாக நடக்கவில்லை – முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்த ஆட்சியில் போலீசார் அத்துமீறி நடப்பதாகவும், லாக்-அப் மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும் புகார்கள் கிளம்பியது.

சமீபத்தில் கேரள பெண்கள் ஜெயிலில் இருந்து பெண் கைதிகள் இருவர் தப்பி சென்ற சம்பவமும் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது.

கேரள போலீசார் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கேரள போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஏற்பாடு செய்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நேற்று இந்த கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பினராயி விஜயன் போலீசாரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

கேரளாவில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போலீசார் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கடந்த ஆண்டு சபரிமலை போராட்டத்தின் போது போலீசாரிடம் இந்த கடமை உணர்வை பார்க்க முடியவில்லை.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டது. அரசுக்கு துணையாக இருக்க வேண்டிய போலீசார் அரசை விட்டு விலகி இருந்தனர்.

கேரள போலீசாரில் சிலர் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக செயல்பட்டார்கள். அரசின் நடவடிக்கைகளை போலீசார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ரகசியமாக தெரிவித்தனர். போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேசியபோது, அவர்களுக்கு போலீசார் மைக் பிடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. உயர் அதிகாரிகள் கூட ஏனோ தானோவென செயல்பட்டனர். பலர் விடுப்பு எடுத்து விட்டு பணியை புறக்கணித்தனர்.

போலீசார் வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டார்களா? என்பதை அவர்கள் நெஞ்சில் கை வைத்து சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் இருந்து மனுதி அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அப்போது சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பணியை மறந்து பைத்தியக்காரர்கள் போல் நடந்து கொண்டனர். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

உயர் அதிகாரிகள் கூட அப்போது முறையாக நடந்து கொள்ளவில்லை. பணியில் இருந்து தவறியவர்கள் கடமை தவறியவர்கள் ஆவார்கள்.

கேரளாவில் இப்போது லாக்-அப் மரணம் நடந்துள்ளது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. லாக்-அப் அறையில் கைதிகளை தாக்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.

லாக்-அப் மரணத்திற்கு காரணமானவர்கள் 3 மாதத்தில் பிரித்து விடப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *