ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் – ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சுங்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், எஸ்.பி.பட்டினம் கடற்கரை பகுதியில் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடி ஆகும். இலங்கைக்கு கடத்துவதற்காக இந்த கஞ்சாவை, கடத்தல் கும்பல் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. கஞ்சாவை பதுக்கி வைத்த கும்பல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனிப்படை போலீசார் ராமேசுவரம் பகுதியில் நள்ளிரவில் மாறு வேடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, இலங்கைக்கு 80 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.